திங்கள், 24 நவம்பர், 2014

வெள்ளத்தில் மூழ்கியது சிவகுருநாதர் வீதி : பயணிக்க முடியாமல் மாணவர்கள் பாதிப்பு

பெய்து வரும் பருவ மழையினால் யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் உள்ள சிவகுருநாதர் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அப்பகுதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மாணவர்கள் உட்பட பலர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.   





 யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட ஜே. 101 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குறித்த வீதிக்கு அருகில் யாழ்.இந்துக் கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளதால் நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

அத்துடன் குறித்த வீதியில் பல நாட்களாக நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் வீதியில் பயணிக்கும்  சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வழுக்கி விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

 எனவே, குறித்த வீதியை உடனடியாக  உரிய அதிகாரிகள்  புனர்நிர்மாணிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
புதன், 20 ஆகஸ்ட், 2014

இராணுவத்தில் இணைந்து மரணித்த சகோதரியும் சொல்லிக்கொடுத்த உண்மையும்..


இராணுவத்தில் இணைந்து மரணித்த சகோதரியும் சொல்லிக்கொடுத்த உண்மையும்..
19.08.2014

உண்மை கடந்த இரு நாட்களின் முன்னர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த தமிழ் சகோதரி ஒருவர்

மரணமாகியிருந்தார். அவரது உடலம் அவரது மரணத்தின் பின்னர் பரிசோதனை ஏதும் செய்யப்படாமலே தகனம் செய்யப்பட்டது.

இச் சகோதரியின் இறப்பு பற்றி பல இணையங்களும் பல கருத்துக்களை கூறி வந்தன. நாம் எம் சகோதரியின் ஒழுக்கத்தை சந்தேகப்படவில்லை.

ஆனாலும் இச் சகோதரியின் இறப்பு தற்போது இராணுவத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு ஒரு பாடத்தினை விட்டு விட்டுத்தான் சென்றுள்ளது.

இணையங்களில் இவரது மரணம் பற்றி பல விமர்சன கட்டுரைகளும் செய்திகளும் வந்த நிலையில் இராணுவ தரப்பில் இருந்து குறித்த சகோதரிக்கு ஏற்கனவே புற்றுநோய் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தான் நாம் விழித்துக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

இது தொடர்பில் கருத்து கூறிய இராணுவம்,

படையில் தமிழ் யுவதிகளை இணைப்பதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்று அடித்து கூறியது.

மருத்துவ பரிசோதனை செய்யாமல் எந்த ஒரு நாடும் படைக்கு ஆள் சேர்ப்பு இடம்பெறாது என்பது நியதி வெளிப்படையுண்மை அப்படியிருக்கையில் இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கு.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு காப்புறுதி இல்லை என்றும் கூறினர். அதற்கும் அப்பால் இவ்வாறு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை என்று அடுக்கடுக்காக கூறினர்.

இந்த உண்மை எல்லாம் இப்பெண்ணின் மரணம் தந்த உண்மைகள்.

இப்போ எங்களுக்கு உள்ள கேள்வியெல்லாம்…….

1980களுக்கு முன்னால் போராட்டம் ஆரம்பிப்பதற்கு காரணமே தரப்படுத்தல்தானே. அவ்வாறெனின் தற்போதும் சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்கு சிறிலங்கா படைகளில் தமிழர்களை இணைத்தது எல்லாம் வெறும் வெத்துவேட்டு கதைகளா? தமிழ் வாலிபர்களுக்கு ஓய்வூதியம் இல்லை காப்புறுதி இல்லை என்றால் என்னத்துக்கு அவர்களை படையில் சேர்க்கவேண்டும்?

இல்லை சிறிலங்கா இப்படித்தான் படையில் ஆட்சேர்ப்பு செய்கின்றது எனின் சிங்கள சகோதர சகோதரியினருக்கும் அப்படியா? இருக்கவே இருக்காது.

இந்த நிலை தமிழர்களை மீண்டும் தரப்படுத்தல் மற்றும் பாகுபடுத்தல் எனும் விடயத்திலேயே கொண்டுவந்து விட்டிருப்பதே உண்மை.
வியாழன், 5 ஜூன், 2014

மனைப்பொருளியல் கண்காட்சி யாழ்.பல்கலையில்

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி; பல்கலைக்கழக கலைப்பீட  மண்டபத்தில்  இன்று காலை 10.30 மணியளவில் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது.
 
இதில் ,மனிதவள விருத்தி, புடவையும் ஆடைத் தயாரிப்பு, உணவுப் போசனை,  மனைப்பொருட்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொழில் வாய்பை பெற்றக்கொள்ளும் வகையில் 
தொழில் வழிகாட்டல் என்பனவும் இடம்பெறுகின்றது.
 
இக் கண்காட்சியானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதன், 23 ஏப்ரல், 2014

மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் இல்லை

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை அது எங்கோ தரையிறங்கியிருக்க வேண்டும் என சர்வதேச விசாரணைக் குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது 


இந்நிலையில் விமானம் கடலில் விழவில்லை என்று சர்வதேச விசாரணை குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் கூறப்படுவதாவது 

விமானத்தை இத்தனை நாட்கள் தேடியும் ஒரு பாகம் கூட கிடைக்காததால் அது வேறு எங்காவது தரையிறங்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

இது தொடர்பாக தகவல் எதுவும் கிடைக்காவிட்டால் அடுத்த சில நாட்களில் விமானத்தை வேறு எங்கையாவது தேடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். 

அதே சமயம் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். விமானம் வேறு எங்காவது தரையிறங்கியிருக்கலாம் என்பது சாத்தியமில்லாத விஷயம் இல்லை. 

ஏனென்றால் இதுவரை விமான பாகங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. 
விமானத்தை 20க்கும் மேற்பட்ட நாடுகள் தேடிக் கொண்டிருக்கையில் அதை ஒரு குறிப்பிட்ட நாடு மறைத்து வைத்திருப்பதாகக் கூறுவது அபத்தம். 

விமானம் வேறு எங்காவது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியை முதலில் இருந்து துவங்கும் திட்டமும் உள்ளது. 

சிலிண்டர் வெடித்ததில் மீனவர்கள் 4 பேர் வைத்தியசாலையில்


படகிலிருந்த சமையல் எரிவாயுச் சிலின்டர் வெடித்ததால்  04 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு  வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு  மீன் பிடிப்பதற்காக சென்ற படகில் வைக்கப்பட்ட சமையல் எரிவாயுச் சிலின்டர் வெடித்ததனாலேயே குறித்த மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது

ஒரு வாரத்திற்கு தங்கியிருந்து  மீன்பிடிப்பதற்கு ஆயத்தமாக   குறித்த படகில் 04 பேர் கடந்த சனிக்கிழமை ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகிலிருந்த சமையல் எரிவாயுச் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய  நிலையில்  அச்  சமையல் எரிவாயுச் சிலின்டர் செவ்வாய்க்கிழமை இரவு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் மேற்படி 04 மீனவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு படகில் இருந்தவர்களின்  உதவியுடன் காயமடைந்தவர்கள் சேதமான படகுடன் இன்று காலை கரைக்கு கொண்டுவரப்பட்டனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.