திங்கள், 3 பிப்ரவரி, 2014

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய நரம்பியல் விடுதி

யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் நோய்களுக்குச் சிகிச்சை வழங்கும் 31 ஆம் இலக்க விடுதி இன்று காலை 11 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. 



கடந்த 30 ஆண்டுகளாக யாழ் போதனா வைத்தியசாலையில் நரம்பியல் விடுதி இன்மையால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இன்று திறந்துவைக்கப்பட்ட விடுதி மூலம் இங்கு சிகிச்சை பெறக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை இந் நிகழ்வில் உரையாற்றிய நரம்பியல் ஆலோசகர் வைத்திய கலாநிதி கே.அஜந்தா 

கடந்த பல ஆண்டுகளாக யாழ் போதனா வைத்திசாலையின் நோயாளர்கள் நரம்பியல் விடுதி இன்மையால் பெரிதும் அவதிப்பட்டனர். போர்க் காலத்தில் நரம்பியல் சம்பந்தமான நோய்களால்  பாதிக்கப்பட்ட பல நோயாளர்கள் கொழும்பு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. ஆனால் இனி யாழ்ப்பாணத்திலேயே அவர்கள் சிகிச்சை பெறமுடியும் என்று தெரிவித்தார். 

மேலும் இப் பிரிவின் மூலம் காக்கா வலிப்பு, பார்க்கின்ஸன் நோய் இயங்க  முடியாமல் இருப்பவர்களுக்கான சிகிச்சை, பொதுவான நரம்புச் சிகிச்சை, பொட்டொக்ஸ் சிகிச்சை மற்றும் நரம்புத்  தளர்ச்சி ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார். 

இந்த நரம்பியல் விடுதி யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள் மட்டுமன்றி வவுனியா கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கும் ஒரு  வரப்பிரசாதமாக இருக்கும் என்றார். 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஸ்ட நரம்பியல் ஆலோசகர் ரஞ்சினி ஹ்மகே கலந்துகொண்டார். மேலும் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.பவானி பசுபதிராஜா, பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் வைத்தியர்கள், தாதியர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.












0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.